Tamil Writing

எழுத்தின் முடிவற்ற பயணம்

எனது முதல் ஆங்கில சிறுகதை 2014ம் ஆண்டு வெளியானது. அப்போது mesmeric என்று புதிதாக சென்னையில் ஆங்கில பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கபட்டது. அதன் ஆசிரியர் கதைகள் எதிர்பார்ப்பதை கேள்விப்பட்ட நான் An evening in nehru street என்ற சிறுகதையை அனுப்பி வைத்தேன். அவருக்கு உடனே பிடித்து போய் முதல் இதழில் என் கதையை பிரசுரித்தார். என் வாழ்வின் ஒரு முக்கியமான நாள் அது. அதன் பிறகு தொடர்ச்சியாக நான்கு கதைகள் எழுதி கொடுத்தேன். அந்த இதழ் ஒரு ஆண்டிற்கு பிறகு மூடப்பட்டாலும், ஒரு பிரசுரிக்கப்பட்ட எழுத்தாளன் என்ற அந்தஸ்தை அது எனக்கு கொடுத்தது.

அதன் பின்பு ஒரு சிறுகதை தொகுப்பு, நான்கு குறு நாவல்கள் என்று இதுவரை ஐந்து புத்தகங்களை அமேசானில் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் தமிழில் இதுவரை எதுவும் எழுதியது இல்லை. சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் “உலகை வாசிப்போம்” என்ற கட்டுரை தொகுப்பினை படித்தேன். உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த தலை சிறந்த எழுத்தாளர்கள் பற்றியும், கவிஞர்கள் பற்றியும் அவர் விரிவாக பேசுகிறார். அதை படித்தபின் நான் உணர்ந்த ஒரு விஷயம் – உலகின் தலை சிறந்த இலக்கிய ஆளுமைகள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதவில்லை. மாறாக அவர்களின் தாய் மொழியிலேயே எழுதினர். அவர்கள் எழுத்தின் தாக்கமும், வீரியமும் தான் அந்த படைப்புகளை நம் மொழிக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் எழுத வேண்டும் என்றதும் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பிக்கின்றனர். காரணம்? Reach. ஆங்கிலத்தில் எழுதினால் தன் எழுத்தை நிறைய பேரிடம் கொண்டுபோய் சேர்க்கலாம் என்கிற எண்ணம் தான் இதற்க்கு காரணம். இது தவறு இல்லை. உலகம் என்றால் ஆங்கிலம் என்கிற பொதுவான எண்ணம் நம்மிடையே உள்ளது.

உதாரணத்திற்கு, உலக சினிமா என்றால் ஆங்கில படங்களையும், ஆஸ்கார் விருதுகளுமே நம் நினைவிற்கு வருகிறது. ஒரு நொடி மாத்திரத்தில் Steven Spielberg நினைவிற்கு வருவது போல் Asghar Farhadiயோ, Bong Joon-hoவோ நினைவிற்கு வருவதில்லை.

வளரும் எழுத்தாளர்கள் பலரும் உணராத ஒரு விஷயம், தற்போதைய சூழலில் லட்சக்கணக்கான எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அதுவும் Kindle Direct Publishing (KDP) போன்ற சேவைகள் வந்த பின்பு எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகுவாக கூடி விட்டது. உங்கள் நண்பர்கள் அல்லாது உங்கள் எழுத்தை நூறு பேர் படித்தால் இந்த காலத்தில் அது பெரிய விஷயம். இப்படியான சூழல் நிலவும்போது, ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்த்து தமிழில் எழுதினால் என்ன என்கிற எண்ணம் சமீபத்தில் தோன்ற தொடங்கியது.

காரணம்?

தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைத்துக்கொண்டு வருகிறது. தமிழில் தற்போது வெளியாகும் நாவல்கள் அனைத்தும் ஒரு genre சார்ந்ததாகவே இருக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது. தமிழின் மிக பிரபலமான நூல்கள் அனைத்தும் ஆன்மிகம், மனித உறவுகள், அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை, பெண்ணியம் மாற்றும் அரசியல்சார்ந்ததாகவே இருக்கிறது. விஞ்சானம், சாகசம், மர்மம் ஆகிய genreகளை சேர்ந்த கதை குறைவாகவே உள்ளன. உதாரணத்திற்கு எழுத்தாளர் சுஜாதா மறைந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழ் எழுத்து உலகத்தில் அவருக்கு நிகரான ஒரு எழுத்தாளர் இன்னும் வரவில்லை என்பதே உண்மை.

இதற்க்கு வாசகர்களும் ஒரு காரணம். கடைக்குள் நுழைந்தால் பொன்னியின் செல்வனையும், கடல் புறாவையும் மட்டும் தேடும் நம்மில் பலர் புதிய புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் படிக்கச் தயக்கம் கொள்கிறோம். அந்த நிலையும் மாறினால் தான் தமிழில் நல்ல கதைகளும் எழுத்தாளர்களும் உருவாக முடியும்.

இந்த காரணங்களை மனதில் கொண்டு தமிழில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். ஆங்கில எழுத்துலகில் ஒரு எழுத்தாளனாய் இருப்பதை காட்டிலும், தமிழில் ஒரு எழுத்தாளனாய் இருப்பது ஒரு செம அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடக்கமும் முடிவும் கிடையாது. ஒரு எழுத்தாளனின் வாழக்கை எந்த புள்ளியில் தொங்குகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. சில சமயம் ஒரு கதையின் தொடக்கம் ஒரு எழுத்தாளனிடம் தொடங்கி இன்னொரு எழுத்தாளனிடம் கூட முடியலாம். எழுத்தும் கதைகளும் எப்போதும் ஒரு முடிவற்ற பயணமாகவே இருக்கும்.

விரைவில் சந்திப்போம்.