Tamil Writing

விமான ஜன்னல்களின் வழியாக

சமீபத்தில் pixar நிறுவனம் தயாரித்த “Piper” என்ற குறும்படம் பார்த்தேன். ஒரு ஆறு நிமிட திரைப்படத்தில் இவ்வளவு அழகாக ஒரு விஷயத்தை கூற முடியுமா என்று வியப்பாக இருந்தது.

2016ல் வெளியான இந்த படம் Sandpiper(உள்ளான்)கள் பற்றியது.

ஒரு உள்ளான் பறவை குஞ்சு தன் கூட்டதோடு முதல் முறையாக இரை தேட கடற்கரைக்கு செல்கிறது. ஆனால், அதற்க்கு அலைகளையும், தண்ணீரையும் கண்டாலே பயமாக இருக்கிறது. ஒரு முறை இரை தேட கடற்கரையில் நடக்கும்பொழுது, ஒரு பெரிய அலை தன்னை நோக்கி வருவதை அது உணர்கிறது. தப்பித்து ஓட நேரம் இல்லாததால், கடல் மணலில் ஒரு குழி அமைத்து பதுங்கி கொள்கிறது. அலை தன் மீது அடித்து கடந்து செல்லும் தருவாயில் அந்த பறவை கண்களை திறந்து பார்க்கிறது. அப்போது அந்த பறவை நீரையும் அதன் அடியில் இருக்கும் அழகையும் பார்க்கிறது, உணர்கிறது. அதன் பின்பு அது தண்ணீரில் நனைவதையும், கடலில் நீந்துவதையும் வாடிக்கையாக கொள்கிறது.

அது போலத்தான், நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் நாம் செய்யும் வரை பயமாகவும், புதிராகவும் இருக்கும்.

விமான பயணம் என்பது என்னை பொறுத்தவரை அப்படித்தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே விமானங்கள் மீது ஒரு அளவுகடந்த ஆர்வம் இருந்தது. என் வீடு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு எத்தனை விமானங்கள் என் வீட்டை கடந்து செல்கின்றன என்று பல நாட்கள் எண்ணி இருக்கிறேன்.

ஆனாலும், என் குடும்பம் இருந்த சூழ்நிலையால் விமான பயணம் என்பது ஒரு எட்டா கனியாகவே இருந்தது.

பின்பு 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் விமானத்தில் செல்ல வேண்டும் என்று தோன்றியது. அப்போது எனக்கு வயது 25. மும்பைக்கு போகலாம் என்று டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்து பணம் கட்டும் வரை போய் விட்டேன். பின்பு ஒரு இனம் புரியாத பயம். விமான பயணம் எப்படி இருக்குமோ? நடு வானில் பறக்கும்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆவது? இது போன்ற பல குழப்பங்கள் தோன்றியது. அதனால் டிக்கெட் புக் செய்யவில்லை.

துணைக்கு என் அம்மாவை அழைத்தேன். அவர்கள் “எனக்கு பயமா இருக்கு டா! நீ ஒன்னு பண்ணு. நீ மொதல்ல போய்ட்டு வா. நல்ல பழகிட்டு அப்புறம் என்ன கூட்டிட்டு போ. சரியா?” என்றார்.

போகவில்லை என்பது ஒரு புறம் கஷ்டமாக இருந்தாலும், மறு புறம் நிம்மதியாக இருந்தது.

மறுநாள், அலுவலகத்தில் என் நண்பனிடம் இதை சொன்னபோது என்னை பார்த்து ஏளனமாக சிரித்தான்.

“இதெல்லாம் ஒரு காரணமா ஜி!” என்றான் ஆச்சர்யமாக. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக இருந்தேன்.

அவன் பலமுறை விமானத்தில் பயணம் செய்தவன். உலகம் முழுக்க சுற்றி இருக்கிறான். அவன் சொன்னது,

“பயந்துட்டே இருந்த இதெல்லாம் எப்ப தான் அனுபவிக்க போறீங்க. இப்போ இருக்குற பயம், எப்பவுமே தான் இருக்கும். தைரியமா போயிட்டு வாங்க என்றான்.”

அவன் சொன்னது ஒரு வகையில் சரியாகத்தான் இருந்தது. சிறிது நேரம் யோசித்தபின் உடனே மும்பைக்கு டிக்கெட் புக் செய்தேன்.

என் முதல் விமான பயணம் மறக்க முடியாததாய் இருந்தது. விமான ஜன்னல்கள் இந்திய நிலப்பரப்பின் அகன்ற நிலங்களின் அழகை என் கண்முன்னே நிறுத்தியது. மலை தொடர்கள், நீர் தேக்கங்கள், சிறிய நகரங்கள், கிராமங்கள், என மும்பை செல்லும் வழி முழுவதும் கண்ணில் படுபவை எல்லாவற்றையும் ரசித்து வந்தேன். நிறைய படங்களும் எடுத்தேன். பயம் ஒரு புறம் இருந்தாலும், நான் கண்ட காட்சிகள் அந்த உணர்வை முற்றிலுமாக மறக்க செய்தது.

அன்று முதல் நான் ஒரு ஐம்பது முறையாவது விமான பயணம் மேற்கொண்டிருப்பேன். ஆனால் இன்று வரை ஜன்னல் ஓரத்தில் உட்காருவது எனக்கு சலிப்பதே இல்லை. ஒவ்வொரு விமான பயணமும் எனக்கு புதிதாக ஒரு நிலப்பரப்பை, சூரியனை, நதியை, கடற்கரையை, அறிமுகப்படுத்திகொண்டே இருக்கிறது.

ஒருமுறை மழைகாலத்தில் விமானப்பயணம்செய்திருக்கிறேன். அது ஒரு அலாதியான அனுபவம். நடுவானில் கருமேகங்களுக்கு இடையே சென்றதும், மின்னல் தரைதொடுவதை நடுவானில் இருந்து பார்த்ததும், மயிர்கூச்சரிய வைக்கும் ஒரு அனுபவம்.

மற்றோரு முறை லண்டனில் இருந்து லாஸ் வேகாஸ் சென்றுகொண்டிருந்த பொழுது விமானம் கிரீன்லாண்டின் மேல் பறந்து கொண்டிருந்தது. அப்போது ஜன்னலில் இருந்து பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் பனிபாளங்கள் இருந்தன. சூரியன் ஒருபுறம் உதித்துக்கொண்டு இருக்க, பனிபாளங்கள் தங்க நிறத்தில் ஜொலித்தன. வானமும் நிலமும் எங்கே தொண்டங்குகிறது, எங்கே முடிகிறது என்று தெரியாதவண்ணம் கலந்திருந்தன. அப்படி ஒரு அற்புதமான காட்சியை இதுவரை நான் கண்டதில்லை.

36,000 அடி உயரத்தில் இருந்து உலகை பார்ப்பதென்பது ஒரு அறியஅனுபவம். இந்த பரந்த உலகில் நாம் ஒரு மிகச்சிறிய புள்ளி என்று நமக்கு உணர்த்தும் ஒரு அறிய அனுபவம். இயற்கையின் எந்த ஒரு படைப்பின் முன் நிற்கும்போதும் அது நம் ஆணவத்தையும், மனிதன் தான் பெரியவன் என்ற எண்ணத்தையும் அடக்கி விடுகின்றன. என்னை பொறுத்தவரை, விமான ஜன்னல்கள் இந்த உலகத்தை மட்டும் நமக்கு காட்டவில்லை. அது இந்த உலகம் நம்மை சுற்றியது மட்டுமல்ல. அதனை காட்டிலும் பல ஆயிரம் மடங்கு பெரியது என்பதையும் நமக்கு உணர்த்திக்காட்டுகிறது.

அடுத்த முறை விமானத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்கையில் ஒன்றை உணருங்கள். நீங்கள் ஜன்னல் வழியாக உலகத்தை மட்டும் பார்க்கவில்லை. உங்களையும் சேர்த்து பார்க்கிறீர்கள்.