பத்து நொடி கதைகள்

டோல் பூத்

காரை டோல் பூத்தில் நிறுத்தினேன். கண்ணாடி கூண்டுக்குள் இருந்தவன் “சிங்கள் ஆ சார்” என்றான். கனத்த மனதுடன் கொடுத்தேன் ஐம்பது ரூபாயை.

வேண்டுதல்

கார் பஞ்சரான சத்தம் கேட்டு கும்பிட்ட கடவுளுக்கு நன்றி சொல்லியபடி ஓடினான் நெடுஞ்சாலையில் பஞ்சர் கடை வைத்திருந்த பாலாஜி.

சுத்தம்

ஒழுக்கம் னா என்னான்னு தெரியாது! டேபிள இவ்ளோ அழுகாவா வச்சிக்கிறது!” என்று மகனிடம் சொல்லிய சுரேஷ், ஒரு அழுக்கு துணியால் டேபிள் ஐ துடைக்க ஆரம்பித்தான்.

காலத்தொடர்பு

கற்கால மனிதன் ஒருவன், கையில் கிடைத்த பெட்டி ஒன்று “ஹலோ ஹலோ” என்று சொல்லுவதை கேட்டு அலற, மற்றொருவன் தொலைந்த தன் செல்போனை நிகழ்காலத்தில் தேடிக்கொண்டிருந்தான்.

உப்புமா

வகுப்பறையில் பசித்த என் கண்ணில் பட்டது அந்த டப்பா. திறந்தேன். அவல் உப்புமா.

ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்த போது கோபமாய் ஒரு ஜோடி கண்கள் என்னை பார்த்தன.

பிறகு தான் உணர்ந்தேன் அது அவள் உப்புமா என்று.

கோணம்

வருகால மனைவியை பார்த்து விட்டோம் என்ற பரவசத்தில் அவளை பார்த்தான் அவன். இன்றைக்கு கஸ்டமர் கிடைக்க போகிறான் என்று பெரு மூச்சு விட்ட படி அவனை பார்த்தாள் அவள்.

கொலு

வழக்கமாக பாடுவதுபோல் கேவலமாக பாடி முடித்தபின் “இன்னிக்கி தொண்டை அவ்வளவா சரி இல்லை” என்று சுண்டல் வாங்கி சென்றாள் கொலுவுக்கு வந்த ரமணி.

தப்பு கணக்கு

“என்ன! இந்த துகள் 17 பில்லியன் ஆண்டுகள் பழமையானதா! ஆனால் இந்த அண்டம் தோன்றியே 13.8 பில்லியன் ஆண்டுகள் தானே ஆகுது…” என்று கூறிக்கொண்டிருந்த விஞ்ஞானியை தடுத்த ஒருவன் “சார், கார்பன் டேட்டிங்க் மெசின் ரிப்பேர்னு சொன்னாங்க. பாக்கலாமா?”என்றான்.

விழிப்பு

“அய்யயோ! மணி 9 ஆச்சே! ஆபீஸ் போகணுமே!” என்று சொல்லி பதறியவனிடம் “டேய்! இது காலைல இல்ல நைட்” என்று சொல்லியபடி டிவி பார்த்து கொண்டிருந்தாள் அம்மா.

தோப்பு

“அங்க ஒரு தோப்பு இருந்ததே!” என்று சொன்னவரிடம், “ஆமா சார். இப்போ அங்க தான் கன்ஸ்ரக்ஷன் போய்ட்டு இருக்கு…கவலை படாதீங்க..தொட்டி செடி நிறைய வைக்க போறோம்” என்று சிரித்தபடி சொன்னார் காண்ட்ராக்டர்.

மம்மூட்டி

தன் வாழ்க்கையில் டன் டன் ஆக மணல் அள்ளி போட்ட கிரேன் ஆபரேட்டரின் சாவன்று மம்மூட்டியால் அவன் சமாதிக்கு மணல் அள்ளி போட்டு கொண்டிருந்தனர் நான்கு பேர்.

அப்பாவின் பரிசு

அப்பாவின் வியர்வயில் விளைந்த காசு அஷோக்கின் பைக் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த “டாட்’ஸ் கிப்ட்” என்ற இரண்டு சொற்களோடு முடிந்து போனது.