Data-loss-Tamil-Flash-fiction
Short Story, Tamil Writing

டேட்டா லாஸ் – Science Fiction குறுங்கதை

பெயர்தெரியா கட்டிடம்
நள்ளிரவு 1:30

“இன்னிக்கு காலையில…எனக்கு…ஸ்டேஜ் 5…சிஸ்டம் அலெர்ட் ஒண்ணு வந்துச்சு” என்றார் ரூபன். வேகமாய் ஆபீஸ்க்கு வந்ததால் அவர் பேசும்போது மூச்சு இறைத்தது. நெற்றி வியர்த்து கொட்டியது.

அவர் சொன்னதை கேட்டதும் அந்த அறையில் இருந்த பத்து பேரின் கண்களும் பயத்தில் உறைந்து போயின. ரூபனுக்கு அவர்களிடம் நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவரின் உடல் எடை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. பரிணாம வளர்ச்சியை தவிர வேறு யாரையும் குறைசொல்வதற்கில்லை.

ஒரு சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“மறுபடியும் ஒரு டேட்டா லாஸ் இன்சிடென்ட்…யூசர் ஐடி: 859623. யூசர் நேம்: ராகவன். இன்சிடென்ட் நேச்சர்: அக்யூட் டேட்டா லாஸ் டியூ டு அன்நோன் எரர்.”

“நாங்களும் பாத்தோம் சார்! ஆனா…எப்படி நடந்துச்…” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“என்னய்யா சொல்றீங்க! ஒன்னில்ல…ரெண்டில்ல..250 வது தடவ இந்த மாறி நடக்குது. இன்னுமா எப்படி நடந்துச்சுனு தெரியல.” அவரின் கோவம் 1234ம் மாடியில் அமைந்திருந்த அரை முழுவதும் எதிரொலித்தது.

“சாரி சார்” என்று சில குரல்கள் சொல்வது அவருக்கு கேட்டது.

“சாரி யாருக்குயா வேணும்! நாம இந்த ப்ராஜெக்ட டேக் ஓவர் பண்ணி 10 வருஷம் ஆக போகுது. பழைய கம்பெனியும் இதே தப்ப தான் பண்ணாங்க. அத சரி பண்ணிருவோம்னு சொல்லி தான் நாம கான்ராக்ட் எடுத்தோம். இப்படியே போயிட்டு இருந்தா மொத்தமா இழுத்து மூட வேண்டியது தான்.”

ஒரு சில நொடிகள் மௌத்திற்கு பிறகு மறுபடியும் தொடர்ந்தார்.

“நம்ம கம்பனிக்கு ஒவ்வொரு யூசரோட டேட்டாவும் முக்கியம்.”

கூட்டத்தில் அமர்ந்திருந்த தன் உதிவியாளன் அலெக்ஸை பார்த்தவர்

“அலெக்ஸ்! இப்போ ஸ்டேட்டஸ் என்ன? ரிகவர் பண்ண முடியுமா?”

“கொஞ்சம் கஷ்டம் தான் சார்! கடந்த அஞ்சு வருஷத்துல இந்த மாறி இன்சிடென்ட்ஸ்ல 25%கும் குறைவான யூசர்ஸ்க்கு தான் முழுசா ரிகவரி பண்ண முடிஞ்சது.”

“டாமிட், அலெக்ஸ்!”

சில பலத்த பெருமூச்சுகளுக்கு பிறகு…

“சரி…எவ்ளோ சீக்கிரம் முடியுமோ பிக்ஸ் பண்ணுங்க. அண்ட், இனிமே இந்த மாறி நடக்காம இருக்கணும்னா என்ன பண்ணலாம்னு யோசிங்க. வி கேனாட் மேக் எனிமோர் மிஸ்டேக்ஸ்”

“கண்டிப்பா சார்”

“எப்போ முடியும் !?”

“சரியா சொல்ல முடியாது சார். நம்ம கோட் பேஸ் ரொம்ப பெருசு சார். அதனால கொஞ்சம் டைம் ஆகும்.”

“ம்..ட்ரை டு கம்ப்ளீட் பாஸ்ட்” என்று சொல்லியபடி ரூபன் இடத்தை விட்டு நகர்ந்தார்.

**********

நுங்கம்பாக்கம்
இரவு 8 மணி

எம்.கே ஹாஸ்பிட்டலில் பார்வை நேரம் முடிந்திருந்த சமயம். கமலாவும் அவள் பதினைந்து வயது மகன் குகணும் வெய்ட்டிங்க் ஏரியாவில் அமர்ந்திருந்தனர். கமலாவின் முகம் வாடி இருந்தது.

டாக்டர் என்ன சொல்ல போகிறாரோ என்று பதறி கொண்டிருந்தவளிடம் வந்த நர்ஸ் ஒருவள் “மேடம்! டாக்டர் உங்கள உள்ள கூப்பிடறார்.” என்றார்.

கமலாவும், குகணும் கதவை திறந்து உள்ளே செல்ல “ப்ளீஸ் கம் இன்” என்றார் டாக்டர்.

“வணக்கம் சார்”

“வணக்கம் மா. உக்காருங்க.” என்றார்.

கமலாவும் குகணும் டாக்டரை பார்த்தபடி அமர்ந்தனர்.

“நீங்க மிஸ்டர் ராகவனுக்கு என்ன வேணும்”

“மனைவி, டாக்டர். அவருக்கு இப்போ எப்படி இருக்கு?”

“சமீபத்துல உங்க ஹஸ்பண்ட் கீழ எங்கியாச்சும் விழுந்தாரா? இல்ல விபத்து எதாவது…?” என்றார் டாக்டர்.

“இல்ல டாக்டர். திடீர்ன்னு மயங்கி விழுந்தார். மூச்சு பேச்சையே காணோம். அதான் உடனே இங்க தூக்கிட்டு வந்தோம். என்னாச்சு டாக்டர்?”

“மிஸ்டர் ராகவனுக்கு மூளையில பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அவருக்கு இப்போ எதுவுமே நினைவு இல்ல”

“என்ன டாக்டர் சொல்றீங்க.” என்றாள் கமலா. அவள் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது.

“ஆமா மா! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நினைவு வந்தது. பேசி பாத்தப்ப தான் அவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லை தெரிஞ்சது. CT ஸ்கேன், MRI எல்லாம் எடுத்து பார்த்தாச்சு. மூளைக்கு எந்த பாதிப்பும் இல்ல. ஆனா எப்படி நினைவு போச்சுனு தான் தெரியல. ரொம்ப விசித்திரமா இருக்கு.” என்று சொல்ல, கமலா துப்பட்டாவால் தன் வாயை மூடி பலமாக அழ தொடங்கினாள்.

குகண் அம்மாவின் தோள்களில் கை வைத்து “அம்மா! அப்பாவுக்கு ஒண்ணும் இல்லமா! கவலை படாதீங்க” என்றான்.

“அழாதீங்க மேடம்…இந்த மாறி அப்பப்போ சில கேஸஸ் வரும். இது ஒரு சில பேஷண்ட்ஸ்க்கு முழுமையா நினைவு வந்திரும்.”

“இத குணப்படுத்த முடியுமா டாக்டர். அவருக்கு நினைவு திரும்புமா?”

“இப்போ எதுவும் சொல்ல முடியாது மா! நினைவு வரலாம்…கொஞ்ச நாள் ஆகலாம்..இல்ல வராமலே கூட போகலாம்…மனச தளர விட்றாதீங்க. கடவுள நம்புங்க. எல்லாம் அந்த ஆண்டவன் கையில தான் இருக்கு.

**********

.