Is Internet Writing confined to a stereotype
Tamil Writing

ஒரு கூட்டுக்குள் அடைக்கப்படும் இணைய எழுத்து

எழுத்து அல்லது இலக்கியம் ஒரு பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் போல  எழுதும் எழுத்தாளருக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்கிறது.
 
அது எழுதும் எழுத்தாளனோடு வளர்கிறது. உருமாறுகிறது. வாசகர்களுக்கு எழுத்தாளனின் நடையை, பாவத்தை கற்பிக்கிறது. எழுத்தானது எழுத்தாளரகள் இருக்கும் இடமெங்கும் காட்டில் வளரும் ஒரு மரம் போல வளர்ந்து நிற்கிறது.
 
தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தில் நாம் ரசித்த, சுவைத்த, காலத்தை கடந்து நிற்கிற அனைத்து  கிளாசிக் நாவல்களும், கட்டுரைகளும் இதன் விளைவாக உருவானவை தான்.
 
எழுத்தாளர்கள் அவர்கள் போக்கில், நடையில், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் கற்பனையை, சிந்தனையை கட்டவிழ்த்து விட்டார்கள். அது விஸ்வரூபமாக உருவெடுத்து நம்மை ஆட்கொண்டது.
 
ஆனால் அந்த நிலை மெதுவாக மாறி வருகிறது. இதற்கு இரண்டு கால மாற்றங்கள் காரணம்.
 

1. புனைவு அல்லாத எழுத்தின் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு

 
இணைய எழுத்து புனைவை (fiction) விட்டு வெகுதூரம் போய்விட்டது. எல்லோரும் கட்டுரைகள் மற்றும் புனைவு அல்லாத இலக்கியங்களை (non-fiction) அதிகம் எழுதுகிறார்கள், வாசிக்கிறார்கள்.
 
புனைவு எழுத்து படிப்பது நேர விரையம் என்கிற ஒரு எண்ணம் இளைஞர்களிடையே நிலவுகிறது. இதற்க்கு காரணம் non-fiction புத்தகங்களை சுற்றி நடக்கும் மார்க்கெட்டிங். Twitter, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பலராலும் “non-fiction படிப்பதே வாழைக்காயில் உயர ஒரே வழி” என்கிற அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது.
 
Productivity  பற்றிய புத்தகங்கள், Business  பற்றிய புத்தகங்கள், சுய முன்னேற்ற புத்தகங்கள், Marketing  மற்றும் Sales  பற்றிய புத்தகங்கள் பிரபலமாகும் அளவிற்கு புனைவு எழுத்து பரவலாக பேசப்படுவதில்லை.
 
Non-fiction புத்தகங்கள் நமது அறிவாற்றலை வளர்க்கும். ஆனால் புனைவு எழுத்து நமக்குள்  உணர்வு ரீதியான முதிர்ச்சியை, அறிவாற்றலை (Emotional Intelligence) வளர்க்கும். கதைகள் நம்மை உணர்வு ரீதியான தயார் படுத்துகின்றன. வாழ்க்கையை எதிர்கொள்ளும் சக்தியை நமக்கு தருகின்றன.
 
ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ இணையதளத்தில் சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் புனைவு எழுத்து படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எழுதப்பட்டிருந்தது. புனைவு எழுத்து நம் சமூகம் சார்ந்த புரிதலை நமக்குள் ஏற்படுத்துகிறது. மேலும் சக மனிதர்களை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
 

2. இரண்டு – எழுத்து பள்ளி கல்வி போல எல்லோராலும், எல்லோருக்கும் கற்பிக்கப்படுகிறது. 

 
இப்போது நாம் படித்து ரசிக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் வாசித்தல் மூலமாகவே எழுத்தை கற்றிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் எப்படி எழுதவேண்டும் என்று யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் இப்போது எழுத்தானது பலராலும் கற்பிக்கப்படுகிறது. முதல் மூன்று வரிகளில் வாசகரின் கவனத்தை ஈர்க்க வேண்டும். எழுத்து நடையில் நாம் கடைபிடிக்கவேண்டிய கோட்பாடுகள் என்ன. இணையத்திற்க்காக எழுதும்போது SEO காக எப்படி சில வார்த்தைகள் திரும்ப திரும்ப வருமாறு எழுத வேண்டும் என்று பல விஷயங்கள் கற்பிக்கப்படுகிறது. 
 
அது தவறில்லை. எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாதவர்களுக்கு அது ஒரு நல்ல ஆரம்ப புள்ளியாக இருக்கும். ஆனால் இதன் எதிர்வினை என்னவென்றால் நாம் ஒருவரின் பார்வை வழியாகவே எப்படி எழுதுவது என்பதை கற்றிருப்போம். இதன் விளைவாக நம் எழுத்தும் நமக்கு கற்பித்தவரின் சாயலிலேயே இருக்கும். வளரும் எழுத்தாளர்கள் என்னதான் எப்படி எழுதுவது என்பதை கற்றிருந்தாலும், பலதரப்பட்ட எழுத்தாளர்களை வாசிப்பதன் மூலமாகவும், சக எழுத்தாளர்களுடன் விவாதிப்பதன் மூலமாகவுமே தங்களின் தனித்தன்மையை வளர்க்க முடியும்.
 

வெற்றிடத்தை நிரப்ப முயற்சி செய்யுங்கள்

 
நீங்கள் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்று முடிவெடுத்தால், நீங்கள் முதலில் எழுத்துலகில் எங்கே வெற்றிடம் இருக்கிறது என்பதனை பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, தமிழில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இடம் இன்னும் தமிழில் காலியாகத்தான் இருக்கிறது. தமிழில் அறிவியல் பற்றி எழுதவும், அறிவியல் புனைவு எழுதவும் நிறைய பேர் இல்லை. இது போல் வெற்றிடங்கள் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. அதனை கண்டறியுங்கள். பிற மொழியில் அந்த தலைப்பு சார்ந்தோ, அந்த துறை சார்ந்தோ என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். அதனை உங்கள் வாசகர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்று யோசியுங்கள். பின்னர் உங்களுக்கே சொந்தமான எழுத்து நடையில் அதனை வெளிப்படுத்துங்கள்.
 
இப்படி செய்தால் நம் எழுத்துலகம் வளம்பெரும், செழிக்கும்.
.