Tamil Writing

தமிழ் Newsletterகள் எங்கே?

கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்கு newsletterகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்திருப்பதை காண முடிகிறது. இணையத்தின் ஆரம்பத்தில் (2000s) வலைப்பூக்கள் (Blogs) எவ்வளவு பிரபலமாய் இருந்ததோ அதற்கு நிகரான மதிப்பு இப்போது newsletterகளுக்கு இருக்கிறது.
 
காரணம்?
 
வாசகர்கள் வலைப்பூக்களை தேடி சென்று படிக்காமல் தனக்கு விருப்பமான எழுத்தாளர்களின் பதிவுகளை தங்கள் மின்னஞ்சல் முகவரியில்  நேரடியாக பெரும் வசதியே இதற்கு காரணம்.
 
மேலும் newsletterகள் படைப்பாளிகளை நேரடியாக தங்கள் வாசகர்களுடன் இணைக்கும் ஒரு பாலமாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இது படைப்பாளிகள் பலருக்கு வருவாயையும் ஈட்டி தருகிறது.
 
மேற்கத்திய Newsletter எழுத்தாளர்கள் பலர் வருடத்திற்கு பல லட்சம் டாலர்கள் வருவாய் பார்க்கிறார்கள். உதாணத்திற்கு Ben Thompsonனின் Stratechery, Tim Burtonனின் Wait But Why, Lenny’s Newsletter போன்ற newsletterகள் ஒரு பத்திரிக்கைக்கு நிகரான வாசக வட்டத்தை உருவாக்கி இருக்கின்றன. இதில் Ben Thompsonனின் Stratechery மட்டுமே வருடத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டுகிறது.
 
இதற்கு முக்கிய காரணம் மக்களுள் வாசிப்பு பழக்கம் அதிகரித்திருப்பது தான். அவர்கள் ஊடகங்களை தாண்டி தனிமனித சிந்தனைகள் மற்றும் விமர்சனங்களின் பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் வாசிப்பு எல்லைகளை, கலாச்சாரத்தை, துறைகளை தாண்டி அகன்று விரிய ஆரம்பித்திருக்கிறது.
 
இந்த மாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணம் தொழிற்நுட்பம். Substack, Revue, மற்றும் Pateron போன்ற தளங்கள் படைப்பாளிகள், எழுத்தாளர்கள்  ஆகியோர் எளிதாக newsletterகள் தொடங்கவும்,   அவற்றை வாசகர்களிடம் எளிதாக விநியோகிக்கவும் உதவுகின்றன. அதைவிட முக்கியமாக இந்த தளங்கள் எழுத்தாளர்களுக்கு முழு கருத்து சுதந்திரம் தருகிறது.
 

தமிழ் Newsletterகளின் காலம் இது!

 
என்னை பொறுத்தவரை, தமிழ் newsletterகளுக்கான இடம் இன்னும் காலியாகவே உள்ளது.
 
தமிழ் எழுத்துலகின் பெரும்பான்மை இன்னும் அச்சுப்புத்தகங்களாகவே இருக்கின்றன. என்னதான் S.Ramakrishnan, Charu Niveditha, Jeyamohan, போன்ற பலர் தொடர்ந்து இணையத்தில் எழுதி வந்தாலும், அவர்களைபோல் பிரபல எழுத்தாளர்களை தாண்டி ஒரு எழுத்து வட்டம் தமிழ் எழுத்துலகில் இல்லையோ என்று தோன்றுகிறது.
 
கதைகளை, இலக்கிய கட்டுரைகளை, கவிதைகளை தாண்டி அறிவியல் பற்றியோ, தொழில்நுட்பம் பற்றியோ, வியாபாரம் பற்றியோ, அரசியல் பற்றியோ அல்லது slice of life எனப்படுகிற அன்றாட வாழ்வியல் பற்றியோ எழுத நிறைய பேர் தமிழில் இல்லை. 
 
தமிழின் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பலர் இன்னும் புத்தகங்கள் எழுதுவதை மட்டுமே தங்களின் இலக்காக கொண்டிருக்கிறார்கள். அது தவறில்லை. ஆனால், அவர்கள்  மேற்கத்திய நாடுகள் போல் சந்தா முறையில் newsletterகள் நடத்துவது பற்றி ஏன் யோசிப்பதில்லை?
 
சந்தா முறையில் newsletterகள் நடத்துவது முழுநேர எழுத்தாளராக உங்களை மாற்றி உங்களுக்கு அபரிவிதமான வருவாயையும் ஈட்டித்தரும்.
 
ஆங்கிலத்தில் ‘1000 True Fans‘ என்கிற ஒரு கோட்பாடு இருக்கிறது. இது கூறுவது என்னவென்றால், உங்களுக்கு 1000 உண்மையான வாசகர்கள் இருந்தால் அவர்களின் உதவி கொண்டு நீங்கள் முழுநேர எழுத்தாளராகவோ, படைப்பாளியாகவோ செயல்படலாம்.
 
ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம்.
 
நீங்கள் தமிழ் நாட்டின் அரசியல் பற்றி ஒரு newsletter ஆரம்பிக்கிறீர்கள். வாரத்திற்கு ஒரு அரசியல் கட்டுரை எழுதி உங்கள் வாசகர்களுக்கு அனுப்புகிறீர்கள். உங்கள் ஒவ்வொரு வாசகர்களிடமிருந்தும் மாதம் 100 ரூபாய் சந்தா தொகை வசூலிக்கிறீர்கள். ஒரு வாசகர் வருடத்திற்கு 1200 சந்தா கட்டுகிறார். உங்களிடம் 1000 வாசகர்கள் இருப்பின், நீங்கள் வருடத்திற்கு 12 லட்சம் வருவாய் ஈட்டுகிறீர்கள்.
 
நீங்கள் கேட்கலாம் “வாசகர்கள் என் எழுத்திற்கு பணம் தருவார்களா?”
 
எனக்கும் தெரியாது. ஆனால், வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று தான் நான் சொல்லுவேன்.
 
நாம் ஒரு சமூகமாக நிறைய மாறி இருக்கிறோம். Hotstar, Netflix, Amazon Prime போன்ற சேவைகளுக்கு பணம் கட்டுகிறோம். கிண்டிலில் புத்தகம் படிக்கிறோம். Swiggy, Zomato, Ola, Uber போன்றவற்றிற்கு வரலாறு காணாத வகையில் செலவு செய்கிறோம். எனவே newsletterகள் நன்றாக இருப்பின் அதற்கு சந்தா கட்டுவது ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்பது என் கருத்து.
 

Newsletter – மொழியாக்கம்

 
Newsletter என்ற சொல்லுக்கு இணையான வார்த்தை தமிழில் இல்லை.
 
நான் பார்த்த  வரையில் Newsletter என்ற சொல்லை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் செய்திமடல் என்று ஆகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை அது பெரிதாக பொருள் தருவதாக எனக்கு தோன்றவில்லை.
 
ஏனெனில் எல்லா மடலிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கத்தான் செய்கிறது. ஆகையால் அது சரியான மொழியாக்கம் இல்லை.
 
Newsletterகள் மின்னஞ்சல் (e-mail) மூலமாக வந்தாலும், ஒவ்வொன்றும் ஒரு இதழ் (issue) என்றே கருதப்படுகிது (ஒரு நாளிதழ் அல்லது வார இதழ் போல). நீங்கள் மாதத்திற்கு நான்கு newsletter அனுப்பினால், நான்கு இதழ் என்று கணக்கு.
 
அப்போ newsletterஐ மின்னிதழ் என்று அழைக்கலாமா?
 
ஆனால் மின்னிதழ் என்றால் e-magazine என்றும் பொருள் வருகிறது.
 
என் அறிவுக்கு எட்டிய வரையில் newsletterகளை மின்னஞ்சல் இதழ் என்று அழைப்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
 
இதைவிட சுருக்கமான, கச்சிதமான வார்த்தை இருப்பின் எனக்கு கூறவும்.
 

உங்கள் மின்னஞ்சல் இதழ் ஆரம்பிப்பதற்கான நேரம்

 
உங்களுக்கு ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெரியும் ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் newsletter நடத்துகிறீர்கள் என்றால், தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள். ஆங்கிலத்தில் உங்கள் newsletter கோடியில் ஒன்றாக இருந்தால், உங்கள் தமிழ் newsletter ஆயிரத்தில் ஒன்றாக இருக்கும்.
 
எனவே, எந்த ஒரு தடையுமின்றி experiment செய்யுங்கள். தமிழ் எழுத்து இணையத்திற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல போவது மின்னஞ்சல் இதழ்கள் தான் என்று நான் ஆழமாக நம்புகிறேன்.
 
அதன் விளைவாக விளைந்தது தான் இந்த மின்னஞ்சல் இதழ். பயணம் – எழுத்து, தொழிநுட்பம், அறிவியல் சார்ந்த என் கருத்துக்களை தமிழில் எழுதி பகிரும் ஒரு முயற்சி. நான் பல ஆண்டுகள் ஆங்கிலத்தில் எழுதி வந்தாலும், தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது. அதை உயிர்ப்பிக்கும் முயற்சியே இந்த இதழ். Subscribe செய்யுங்கள். சந்தா கட்டணம் எதுவம்  இல்லை. இலவசம்.
 
Newsletterகள் பற்றி எதேனும் கேள்விகள் இருப்பின் தயங்காமல் தொடர்பு கொள்ளவும்.