Vallal Karnan - Tamil short story
Short Story

வள்ளல் கர்ணன் – குறுங்கதை

கொளத்தூர் பஸ் ஸ்டாப் அருகில் இருந்த முத்து லட்சுமி மஹால் உள்ளே கிருஷ்ணா நுழைந்தபோது நன்றாக இருட்டி இருந்தது. வாசலில் நீல பட்டு பாவாடை அணிந்த சிறுமி ஒருத்தி பஸ் பயணத்தில் வியர்த்திருந்த அவன் முகத்தில் பன்னீர் தெளித்தாள்.

“கற்கண்டு எடுத்துக்கோங்க அங்கிள்” என்று சிரித்தபடி சொன்னாள்.

அவனுக்கோ நல்ல பசி. இது தான் சாக்கு என்று ஒரு பிடி அள்ளி வாயில் போட்டு கொண்டான்.

பந்திக்கு போகலாம் என்று முடிவு செய்தவன் தன் நண்பனையும் அவன் வருங்கால மனைவியையும் மேடையின் கீழ் இருந்து ஒரு முறை பார்த்து விட்டு போகலாம் என்று முடிவு செய்தான்.

மேடை நோக்கி நடந்தவனுக்கு ஒரே ஆச்சரியம்.

எங்கு பார்த்தாலும் பட்டு புடவைகளும், சார சாரமாய் நகைகளும் அணிந்த படி பெண்கள் நடமாடி கொண்டிருந்தனர். ஆண்களும் சிறுவர்களும் சம்மந்தமே இல்லாமல் ஷெர்வாணி அணிந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

முகூர்த்த நாள் வந்தா தான் நம்ம ஆளுங்க கிட்ட எவ்வளவு வசதி இருக்குனே தெரியுது.

என்று நினைத்தபடி மேடை அருகில் சென்றவன் தன் நண்பனை அவன் வருங்கால மனைவியுடன் பார்த்தான். ஜோடி பொருத்தம் நன்றாக இருந்தது. இருவரும் எல்லோரையும் பார்த்து கையசைத்த படியும், கும்பிட்ட படியும் இருந்தனர். கொத்து கொத்தாக மக்கள் வந்து நிற்க, “சார்.. நேரா பாருங்க..” என்று சொல்லியபடி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான் போட்டோகிராப்பர்.

கல்லூரி காலத்தில் “கோவா போகணும்னா பாஸ்போர்ட் எடுக்கணுமா மச்சான்?” என்று கேட்டவன் இன்று ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதும் , திருமணம் செய்து கொள்வதும் கிருஷ்ணாவை ஆச்சரியப்படுத்தியது.

காலம் எவ்ளோ வேகமா போகுது…

என்று அவன் நினைத்திருக்க, நண்பனை பார்த்ததும் மேடையில் இருந்தவன் “வாடா மச்சான்! எப்படி இருக்க?” என்று கேட்டான். உச்சஸ்தாயில் மலிவு விலை இசை குழு ஒரு பாடிக்கொண்டிருந்ததால், அவன் வாயசைப்பது மட்டுமே கிருஷ்ணாவுக்கு தெரிந்தது.

குத்து மதிப்பாக புரிந்து கொண்டு, “சூப்பர்” என்று இவனும் சைகை செய்தான்.

“சாப்பிட்டு தான் போகணும்” என்று மறுபடி வாயசைத்தான் நண்பன்.

“கண்டிப்பா” என்று தோளை குலுக்கினான் கிருஷ்ணா.

செயற்கையாக சிரித்த அவன் நண்பன் மறுபடி கை குலுக்குவதையும் கும்பிடுவதையும் தொடர்ந்தான்.

“நம்ம கூடவே தான் சுத்திட்டு இருந்தானுங்க…எப்படி செட்டில் ஆணானுங்கனு தான் தெரியல..நாம மட்டும் தான் வெட்டியா சுத்திட்டு இருக்கோமோ?” என்று மேடை முன் கிருஷ்ணா எண்ணியபடி இருக்க

“ஹே! கிரிஷ்” என்று ஒரு குரல் கேட்டது.

யார் என்று திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

“மேகா?!” என்று அவன் ஆச்சர்யத்துடன் கேட்க, புன்னகையால் அவன் கேள்விக்கு பதில் அளித்தாள் மேகா.

அதே புன்னகை. அதே அழகிய சிரிப்பு. நெற்றியில் ஒரு சின்ன சந்தன கீற்று. காற்றில் நெற்றி ஓரமாய் அசைந்தாடிய முடி. கல்லூரியில் பார்த்ததை விட பல மடங்கு அழகாக இருந்தாள்.

ஐந்து வருடங்கள் ஒருத்தியை இந்த அளவுக்கு அழகாக மாற்றி விடுமா! என்று அவனுக்கு தோன்றியது.

“மேகாவா இது! காலேஜ்ல கூட படிக்கும் போது ரொம்ப சுமாராத்தான் இருப்பா. இப்போ என்ன இப்படி இருக்கா! அப்போ நம்ம கூட குளோஸ் ஆ இருந்தப்பவே கரெக்ட் பண்ணி இருக்கலாம். லட்சியம் அது இதுன்னு சொல்லி கோட்டை விட்டுட்டோமே. ச்சை! என்ன கொடுமைடா இது.” என்று தன்னை நொந்து கொண்டான்.

“கிரிஷ்! என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்ல மேகா..உன்ன ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேனா… அதான் ஷாக் ஆயிட்டேன்.”

“ஹேய்!” என்று அவன் கையை தட்டி செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

அவன் உடலெங்கும் அட்ரினலின் ஒரு முறை பிரவாகமெடுத்து அடங்கியது.

“உண்மைய சொன்னேன் பா” என்று கைகளை தேய்த்து கொண்டான்.

அழகாக சிரித்தாள் மேகா.

அவள் சிரிப்பை மேலும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.

“எங்க ஒர்க் பண்ற?” என்றாள் அவள்.

“அயோ! கேக்க கூடாத கேள்வியை கேட்டுட்டாளே. இப்போ என்ன சொல்றது….ம்…சும்மா அடிச்சு விடுவோம்.”

“நான் சொந்தமா ஒரு கம்பெனி வச்சிருக்கேன்.”

“வாவ்! என்ன கம்பெனி?” என்றாள் ஆர்வமாக.

“இப்படி திடீர்னு கேட்டா என்னத்த சொல்றது”

“என்ன சொன்ன?”

“ஒண்ணுமில்ல”

“என்ன கம்பெனினு கேட்டேன்.”

“அது..வந்து…ஃபினான்ஷியல் கன்சல்டிங்க் ஃபார்ம். ஸ்டாக் ப்ரோக்கிங், மியூச்சுவல் ஃபண்ட்.”

“ஐயோ! கன்னாபின்னானு உளரோமே” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“சூப்பர் டா! ஐ அம் ஹேப்பி பார் யூ” என்றாள்.

கல்லூரியில் படிக்கும் போது மேகாவும், கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்தபோதும், அவர்களின் சூழ்நிலை அவர்களை தள்ளியே வைத்திருந்தது. கிருஷ்ணா சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தான். மெகாவோ நல்ல வேலைக்கு போய் தன் குடும்பத்தை மேலே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாள். இருவரும் அவரவர் லட்சியத்தில் மூழ்கி இருக்க காலம் அவர்களிடம் இருந்த இடைவெளியை அதிக படுத்தியது.

“என்ன பத்தி சொல்றது இருக்கட்டும், உன்ன பத்தி சொல்லு. என்ன பண்ற?”

“நான் ஷோலிங்கநல்லூர்ல ஒரு ஐடி கம்பெனில வொர்க் பண்றேன்.”

“நைஸ். நீ எதிர்பார்த்த மாதிரியே..குட்…குட்”

“வீடு அதே இடம் தான க்ரிஷ்?”

“ஆமா…கே. கே. நகர்.”

“கார்ல வந்தியா?”

நீ புரோட்டா மாஸ்டர்ங்கறது உனக்கு மட்டும் தான் டா தெரியும் என்று வடிவேலு சொல்கிற காமெடி ஞாபகம் வந்தது.

“இல்ல..கேப்”

அவள் எதுவும் சொல்லும் முன் கிருஷ்ணா மறுபடி தொடர்ந்தான்.

“கார் இருக்கு…பட் ஒரே ஆளுக்கு எதுக்கு கார். நண்பர்கள், இல்ல ஃபேமிலியோட போனா தான் வண்டி எடுப்பேன். தனியா போனா பப்ளிக் டிரான்ஸ்போர்ட் தான். சுற்றுச்சூழலை பாதுகாக்க..ஏதோ நம்மால முடிஞ்சது.”

“வாவ்! கிரேட்…பை தி வே…கல்யாணம் ஆயிடுச்சா?” என்றாள் மேகா.

“ஹா ஹா! நல்ல ஜோக்…”

“ஹேய்! ஏன் இப்படி சொல்ற…நம்ம விசுவ பாரு….எப்படி செட்டில் ஆயிட்டான்” என்று மேடையை பார்த்தபடி சொன்னாள்.

“அவனவனுக்கு அமையுது…எனக்கு எங்க” என்றான் கிருஷ்ணா.

“இதெல்லாம் உன் கைல தான் இருக்கு க்ரிஷ்” என்றாள்.

“கரெக்ட் தான். உனக்கு? மாப்பிள பாக்க ஆரம்பிச்சாச்சா?”

“இல்லை இல்லை…இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்லி இருக்கேன்.”

கடவுளா பாத்து ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்…நல்லா போயிட்டு இருக்கு…கண்டின்யூ பண்ணுவோம்.

திடீர் என்று அவன் கையை பார்த்தவள் “பரிசு ஒண்ணும் வாங்கலியா?” என்றாள்.

நாம சாப்பிட மட்டும் தான் வந்தோம்னு தெரிஞ்சா அசிங்கமாயிருமே!

“நாம எந்த கல்யாணத்துக்கு போனாலும் கேஷ் தான். பரிச விட கேஷ் தான் நல்ல யூஸ் ஆகும். நீ என்ன வாங்கி இருக்க?”

“நான் மாப்பிள்ளை, பொண்ணு, ரெண்டு பேருக்கும் வாட்ச் செட் வாங்கி இருக்கேன். 3000 ருபீஸ்.” என்றாள்.

மூவாயிரம் ரூபாயா!

“சரி! டைம் ஆகுது…நாம கிப்ட் குடுத்துட்டு சாப்பிடலாம்.” என்றாள்.

நான் பிறகு கொடுத்து கொள்கிறேன் என்று சொல்லி சாப்பிட சென்று விடலாம் என்று நினைத்தான். பின்பு யோசித்தபோது.

கூட நின்னு கிப்ட் குடுத்தா அவ கூட உக்காந்து சாப்பிட ஒரு வாய்ப்பு கிடைக்கும். அப்படியே அவ கூட நின்னு எடுத்த குரூப் போட்டோவையும் மச்சான் கிட்ட சொல்லி வாங்கிறலாம். எல்லாம் நல்லா போச்சுன்னா..ஒரு நாள் டின்னர் கூட்டிட்டு போகலாம்.

என்று தோன்றியது.

“சரி” என்று சொன்னான் கிருஷ்ணா.

சுமார் நாற்பது பேர் குரூப் போட்டோ எடுப்பதற்காக வரிசையில் பரிசுகளுடன் நின்றுகொண்டிருக்க மேகாவும், கிருஷ்ணாவும் அவர்கள் பின்னால் நின்றனர்.

வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, கிருஷ்ணன் அடி வயிற்றில் புளி கரைந்து கொண்டிருந்தது.

ஐயோ! இப்ப என்ன பண்றதுன்னு தெரியலயே…ம்…ஒண்ணு பண்ணலாம்…வெளியே போய் ஒரு மொய் கவர் வாங்கி பர்ஸ்ல பஸ் காசு போக மீதி எவ்வளவு இருக்கோ போட்டு கொடுப்போம்.

திடீர் என்று பேண்ட் பாக்கெட்டை தடவி பார்த்தவன் “மேகா! நான் மொய் கவர் வாங்க மறந்துட்டேன். நீ வரிசைல நில்லு. நான் இப்போ வந்துற்றேன்.”

“ஓகே! சீக்கிரம் வா!” என்றாள்.

மண்டபத்தின் வாசல் அருகில் வந்தவன் தன் பர்சை ஒரு முறை திறந்து பார்த்தான். முப்பத்து ஐந்து ரூபாய் இருந்தது.

“முப்பத்து அஞ்சுல பஸ்க்கு பதினஞ்சுனு வச்சா கூட இருபது ரூபா தான வரும். இருபது ரூபாய் மொய் வச்சா ரொம்ப கேவலமா இருக்குமே! மேகா கிட்ட சொல்லாம அப்படியே எஸ்கேப் ஆயிரலாமா?” என்று யோசித்தபடி நின்றுகொண்டிருந்தான்.

அப்போது “க்ரிஷ்!…மச்சான்!” என்று ஒரு குரல் கேட்டது.

பந்தி பரிமாறும் இடத்திலிருந்து கை துடைத்தபடி கருணாகரன் கிருஷ்ணாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“கர்ணா! எப்புட்றா இருக்க!”

“செமையா இருக்கேன் டா! நீ? வேலை ஏதும் செட் ஆச்சா!!”

“ஒன்னும் இல்ல டா! பாத்துட்டு இருக்கேன்”

“ம்…கிடைக்கும் மச்சான்.”

“ம்..கர்ணா…நம்ம பசங்க வேற யாரும் வரலையா?”

“இல்லடா!”

“மேகாவ பாத்தியா?”

“எங்க?”

“அதோ பார்.” என்று அவளை நோக்கி கை காட்டினான் க்ரிஷ்.

“யப்பா! மேகாவா இது! செம..ஆனா காலேஜ்ல…”

“நானும் அதே தான் யோசிச்சேன்.”

“அப்போவே ப்ரொபோஸ் பண்ணி இருக்கலாம். இப்படி விட்டுட்டு நிக்கிறியே டா”

“விதி…காலம் அவளை இப்படி மாத்தும்னு யார் கண்டா”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்

“சரி சாப்டாச்சா?” என்றான் கிரிஷ்.

“ஆச்சு டா! நீ” என்று சொல்லியவன் கையில் இருந்த போன் சட்டென்று ஒலி எழுப்ப

“ஹலோ! ஆமா..இதோ கிளம்பிட்டேன். ஆமா… பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்.” என்றான்.

போனை வைத்து விட்டு திரும்பிய கர்ணா “கிரிஷ்! கிப்ட் குடுத்துட்டியா?”

“இன்னும் இல்ல டா!” என்று தயங்கியபடி சொன்னான்.

“ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா?”

“என்னடா!”

“நான் கொஞ்சம் அவசரமா கெளம்பனும்.. கவர் குடுத்துட்டு போயிடலாம்னு பார்த்தா கூட்டம் ஜாஸ்தியா இருக்கு…நீ கொஞ்சம் குடுத்திற முடியுமா?”

“ஆஹா! பழம் நழுவி பால்ல விழுதே” என்று நினைத்தபடி “சரி” என்றான் கிரிஷ்.

“இந்தா டா! நீ குடுத்திரு…நான் கிளம்பறேன். அப்புறம் ஒரு நாள் நிதானமா பேசலாம்”

கவரை வாங்கும் முன் மேகா பார்க்கிறாளா என்று பார்த்தான். அவள் வேறு திசையில் பார்த்து கொண்டிருந்தாள்.

“கண்டிப்பா கர்ணா! பாப்போம்..பாத்து போ.”

கவர் புதிதாக இருந்தது. மேலே பெயர் எதுவும் எழுதப்படவில்லை. கவரை திறந்து பார்த்த போது உள்ளே ஆயிரம் ரூபாய் இருந்தது.

“ஆயிரம் ரூபாயா! யப்பா!” என்று கவரை மூடியவன் மறுபடி வரிசையில் சென்று நின்றான்.

“கவர் வாங்கியாச்சா?” என்றாள் மேகா.

“எஸ்.. பென் இருக்கா?”

“இரு” என்று தன் கை பையை சிறிது நேரம் துழாவிய அவள்…”இந்தா” என்றாள்.

பேனாவை வாங்கியவன் “Best wishes from Krishna” என்று கவர் மீது எழுதினான். உள்ளுக்குள்ளே மனசாட்சி உறுத்தினாலும், அவளின் கவனத்தை கவர எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.

“மேகா! ஒரு ஒன் ரூபிஸ் இருக்குமா?”

அவளிடம் ஒரு ரூபாய் வாங்கியவன் அதை கவரை திறந்து உள்ளே வைத்தான். ஒர கண்ணால் அவள் கவர் உள்ளே எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதை அவனும் பார்த்தான்.

“அது அவசரத்துல மறந்துட்டேன்…1001 வைக்கிறது தான முறை.”

பதிலுக்கு புன்னகைத்தாள் மேகா.

கவரை மாப்பிள்ளையிடம் கொடுத்து போட்டோ எடுத்து கொண்ட கிருஷ்ணா, மேகாவுடன் அமர்ந்து சாப்பிட்டும் முடித்தான்.

இருவரும் மண்டபத்தை விட்டு வெளியே வந்த சமயம், மேகாவிடம் என்ன பேசுவது என்று யோசித்தபடி நடந்தான்.

“எப்படி போக போற க்ரிஷ்?” என்றாள் மேகா.

“கேப் தான்!”

“இப் யூ டோன்ட் மைன்ட்…நான் கே. கே நகர் தாண்டி தான் போறேன்..உன்னை ட்ராப் பண்ணிடவா!?”

“கண்டிப்பா! உனக்கு எதுவும் பெருசா சிரமம் இல்லனா…”

“டோன்ட் பி ஸோ பார்மல்…எனக்கு என்ன சிரமம்…வா…போலாம்.” என்றபடி தன் காரை நோக்கி நடந்தாள்.

காரை நோக்கி நடந்தவள்… “நிறைய சாப்பிட்டது காபி குடிக்கணும் போல இருக்கு…போற வழியில காபி சாப்பிட்டு போலாமா?” என்றாள்.

அவன் அதிர்ச்சியில் உறைந்திருக்க “இந்த சந்திப்பை celebrate பண்ண என் ட்ரீட். ஓகேவா?”

“சுவர்” என்று சிரித்தபடி அவளுடன் சென்றான்.

“ஆஹா! ஒர்க் அவுட் ஆயிரும் போலியே…கர்ணா!…நீ மட்டும் கவர் கொடுக்கலைன்னா இது எதுவுமே நடந்திருக்காது மச்சான்..வள்ளல்டா நீ”

என்று யோசித்தபடி காருக்குள் ஏறினான்.

.