4 min read
கோடைகால பிற்பகல் பொழுதுகள்

எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் அனைவரும் தங்கள் கதைகளிலும், இலக்கிய படைப்புகளிலும், பாடல்களிலும், அதிகாலை, அந்திமாலை, அல்லது இரவை பற்றி மட்டுமே எழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அழகும், கதகதப்பும், மென்மையும் நிறைந்த பிற்பகல் பொழுதினை பற்றி ஏன் பெரிதாக யாரும் பேசுவதில்லை என்ற எண்ணம் எனக்குள் சமீபத்தில் தோன்றியது.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் மிகவும் போர் அடித்தது என்று கார் எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். எப்போதும் வீட்டிலேயே இருப்பதால் மனதிற்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. சாலை நிறைய வாகனங்களையும், ஹாரன் சத்தத்தையும், உயிரை பணயம் வைத்தபடி பைக்கை வளைத்து நெளித்து ஓட்டும் இளைஞர்களையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. வண்டி ஓட்டிச்சென்று வெளியில் எங்கேயாவது சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று மனைவியிடமும் அம்மாவிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

வேளச்சேரி பிரதான சாலை வழியாக வண்டி ஓட்டிக்கொண்டே சென்ற நான், கத்திப்பாரா சந்திப்பு, சைதாப்பேட்டை, ஜெமினி சந்திப்பு வழியாக ஒரு மணி நேரம் கழித்து நுங்கம்பாக்கத்தில் காரை நிறுத்தினேன். நுங்கம்பாக்கத்தில் இரண்டு பெண்கள் புதுவிதமான உணவு விடுதி நடத்திவருவதை சில வாரங்களுக்கு முன்பு கேள்விப்பட்டிருந்தேன். அங்கே வெண்பன்றி இறைச்சி மிகவும் ஸ்பெஷல் என்றும் அதை தவிர வேறு எதுவும் கிடைக்காது என்றும் நண்பர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட முடியாது போலும். பார்சல் தான் வாங்க வேண்டும். சரி வாங்கி வந்து காரில் சாப்பிட்டு கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஒரு pork fried rice உம், ஒரு போர்ஷன் pork ribs உம் (நெஞ்செலும்பு கறி) வாங்கி கொண்டு காரை இன்னும் சிறிது தூரம் ஓட்டிச்சென்றேன்.

எங்கு நிறுத்தி சாப்பிடுவது என்று தெரியாமல் சற்று நேரம் சுற்றி திரிந்த நான் தி.நகரின் ஒரு காலியான சாலையில் காரை நிறுத்தி விட்டு, பின் சீட்டீற்கு நகர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஜன்னல் கதவுகள் இறக்கிவிட பட்டிருந்ததால் இதமான காற்று காருக்குள் சுழன்றபடி இருந்தது. அந்த இதமான காற்றும் எலும்புகளில் இருந்து நழுவி விழுந்த காரசாரமான பன்றி இறைச்சியும் ஒரு அலாதி சுகத்தை தந்தது. அதனை மேலும் மெருகேற்றும் வகையில் வெயிலின் உக்கிரம் குறைந்து மென்மையான சூரிய ஒளி சாலை எங்கும் பரவியது. வண்டிகளுக்கு அடியில் படுத்துக்கொண்டிருந்த நாய்கள் மெல்ல வெளியே வந்து உலவ ஆரம்பித்தன.

காலை முதல் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசி சிரித்தபடி பசி ஆறிக்கொண்டிருந்தனர். பழைய துணிகளுக்கு பாத்திரம் தரும் வியாபாரி ஒருவர் தன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு ஒரு சிறிய கோவில் முன்பு உறங்கிக்கொண்டிருந்தார்.

நிறைய பேர் இருந்தும் அந்த சாலை எந்த ஒரு அசைவும் இன்றி இருந்தது. யாரும் பரபரப்பாக ஓடவில்லை, கடிகாரத்தை துரத்தவில்லை. எல்லோருக்குள்ளும் ஒரு அமைதி நிலவுவதை காண முடிந்தது.

பிற்பகல் பொழுதுகள் மிகவும் அழகானவை. அதுவும் கோடைகாலத்தின் பிற்பகல் பொழுதுகள் தனி அழகுடையவை. கொளுத்திக்கொண்டிருந்த முற்பகலின் உக்கிரத்தை குறைத்து மெல்லிய இளங்காற்றினால் நம்மை வருடக்கூடியவை.

சாலை முழுவதும் விளையாடும் சிறுவர்கள். அவர்களின் சத்தம் கேட்டபடி திண்ணையில் வேலை முடித்து உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாக்கள். மெல்லிய மணியோசை காற்றில் தவழ சைக்கிளில் பவனி வரும் ஐஸ் வண்டி என பிற்பகல் தனக்கென்று ஒரு ஏகாந்த உலகத்தை சிருஷ்டித்து ஆள்கிறது. தன்னை அவதானிப்பவர்களை தன்னுள் இழுத்து ஒரு தனி உலகிற்கு கூட்டிச்செல்கிறது.

அன்று காருக்குள் இருந்து நான் பார்த்த அந்த சாலையும், அந்த சூழலும், என்னை என் பள்ளிக்காலத்திற்கு கூட்டிச்சென்றது. ஒருமுறை நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டியபடி அம்பத்தூரில் இருந்து பட்டாரவாக்கம் வரை சென்றோம். அங்கே ஒரு பெரிய மைதானத்தில், வேப்பமர நிழலில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டு ரயில்களை வேடிக்கை பார்த்தபடி நண்பர்களுடன் மணிக்கணக்கில் பேசியது நினைவிற்கு வந்தது. அன்று தாமதமாக வீட்டுக்கு சென்று அம்மாவிடம் திட்டு வாங்கியதும் நினைவிற்கு வந்தது.

முற்பகலை கடிந்த யாரும் பிற்பகலை அப்படி பார்ப்பதில்லை. பிற்பகலில் வரும் அந்த ஆனந்தமான உறக்கத்தை யாரும் வெறுத்ததில்லை. இரவு முழுவதும் தூங்குவதை விட மதியம் தூங்குவது ஒரு தனிவித புத்துணர்ச்சியை நமக்கு தருகிறது. அது நம்மை நீளும் மாலைப்பொழுதிற்காக தயார் செய்கிறது.

பிரபல அர்ஜென்டினிய எழுத்தாளர் ஜோர்ஜ் லூயிஸ் போர்கே (Jorge Luis Borges) பிற்பகல் பொழுதுகள் பற்றி கூறும்பொழுது அவை நமக்கு ஏதோ ஒன்றை சொல்ல முயற்சிப்பதாக கூறுகிறார். அது ஒரு நல்ல இசை போன்றது என்றும், அதனை ரசிக்க மட்டுமே தெரிந்த நமக்கு அதனை மொழிபெயர்க்க தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அது உண்மைதான் போலும்.

நாம் செய்கிற அனைத்தையும் நிறுத்திவிட்டு பார்த்தால், இயற்கை எப்போதும் நம்மிடம் ஏதோ சொல்ல முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதனை நம்மில் சிலர் உணர்கிறோமே தவிர, முழுமையாக மொழி பெயர்க்க யாராலும் முடிவதில்லை.

ஏன்? நாமும் இயற்கையின் ஒரு அங்கம் தானே? பின்பு ஏன் நம்மால் முடியவில்லை?

அன்று என் காரினுள் அமர்ந்திருக்கையில் என்னுள் இது போல் பல எண்ணங்கள், கேள்விகள், தோன்றி மறைந்தன.

ஏன், இந்த நொடியில் கூட நான் ஏன் பிற்பகல் பற்றி எழுத முடிவெடுத்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை இயற்கை என் மூலமாக இந்த உலகிற்கு பிற்பகலின் பெருமைகள் பற்றி சொல்ல நினைக்கிறதோ?

இருக்கலாம்.

இயற்கையின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. ஆனால், பிற்பகலின் அழகை உணரும், ரசிக்கும், அவதானிக்கும் பக்குவம் எனக்குள் இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.